Featured Post

Monday, July 8, 2019

தமிழகத்துக்கு தேவை.. 100 கோடி மரங்கள்..!

மாடுகட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடித்த
பண்டைக்கால
பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.

ஆனால்...
இன்றைய காலகட்டத்தில், 
பருவமழை பொய்க்கும்போது
பிற மாநிலங்களிடம்
தண்ணீருக்காக கையேந்தும் அவலநிலை
அவ்வப்போது நமக்கு ஏற்படுகிறது.

இதற்கு இயற்கை மட்டும் காரணமல்ல,
நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததும் 
மிக முக்கிய காரணம்.



மேகத்தை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி
மரங்களுக்கு மட்டுமே உண்டு.

இதனை கற்றுக்கொண்ட நாடுகள்
மரங்கள் வளர்ப்பு இயக்கத்தை
தேசிய இயக்கமாக மாற்றி
அளப்பரிய பயன் பெற்றது வரலாறு.















இந்தோனேசிய நாட்டின்
ஜீவ நதிகள் வறண்டபோது
அங்குள்ள நதிக்கரைகளில்
சூபாபுல் மரங்களை
நட்டு வளர்க்கும்
மாபெரும் இயக்கத்தை
அந்நாட்டு விவசாயிகள் நடத்தினர்.
மூன்றே ஆண்டுகளில்
வறண்ட ஆறுகள்
ஜீவ நதிகளாக மாறின.



இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட
அவர்கள் செய்த முதல் வேலை,
மரங்கள் நடும் மாபெரும்
தேசிய இயக்கத்தை நடத்தியதுதான்.

20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட
இஸ்ரேல் நாட்டில்,
25 கோடி மரங்கள்
புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால்,
அந்தப் பாலைவன பூமியில்
பசும் சோலைகள் உருவாகி விட்டன.
நம்மைவிட பல மடங்கு திறனுடன் 
ஆப்பிளும், தக்காளியும்
அங்கே விளைகின்றன.

இஸ்ரேல் நாட்டைப்போல்
6 மடங்கு
அதிக பரப்பு கொண்டது நம் மாநிலம். 
1,30,000 சதுர கிலோமீட்டர்
பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு
மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

இளைஞர்கள் களம் இறங்கினால்,
நமது 17,000 கிராமங்களில்
ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம்
மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து
100 கோடி மரங்கள் வளர்ப்பது
100 சதம் சாத்தியமே.

வேலிக்கருவை என்ற
நச்சுமரத்தை அப்புறப்படுத்தி,
வேம்பு, மலைவேம்பு,
புளி, பூவரசு, சூபாபுல்
புங்கன், தேக்கு, செம்மரம்
உள்ளிட்ட வளம்தரும் மரங்களை
அதிகம் வளர்க்க வேண்டும்.




சூபாபுல் எனப்படும் சவுண்டல் மரங்களை
நெருக்கமாக காடுபோல் வளர்க்கும்போது
நடக்கும் அதிசயத்தை நேரில் கண்டவன் நான்.

நான் படித்த
மதுரை வேளாண்மை கல்லூரியில் இருந்து
சவுண்டல் மர விதைகளை எடுத்துவந்து
கிராமத்து தோட்டத்தில் போட்டுவைத்தேன்.
அவை அதிவேகமாக வளர்ந்து அடர்ந்து
காடுபோல் மாறிவிட்டன.

எங்கள் கிராமத்துக்கு மேல் மேகமூட்டம் வரும்போது,
சவுண்டல் தோப்பில் முதலில் மழை இறங்கியது.
தோட்டவேலை செய்த அண்ணன்மார்கள்
இதனை மகிழ்ச்சியோடு உறுதிசெய்தனர்.

மேகங்களை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர ஆற்றல்
மரங்களுக்கு உண்டு.
பெய்யும் மழைநீரை புனல்போல செயல்பட்டு
மண்ணுக்கு அடியில் சேகரிக்கும்
அதிசய ஆற்றலும் மரங்களுக்கு உண்டு. 

தமிழகத்துக்கு இப்பொது தேவை
பயன்தரும் 100 கோடி மரங்கள்.

இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால்,
ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக
மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைமை
ஒருபோதும் வராது.
மாதம் மும்மாரி பொழிவது
இயற்கை நியதியாக மாறிவிடும்.

தமிழ்நாட்டில் 100 கோடி மரங்கள்
வளர்க்கும் பிரமாண்ட இலக்கை நோக்கி,
அவரவர்க்கு சாத்தியமான
முன்முயற்சியைத் தொடங்குவோம்.

எதிர்கால தலைமுறைக்கும்
பயன்களை அள்ளித்தரும் 
மரங்கள் வளர்க்கும் இயக்கத்தில்
நீங்களும் பங்கு பெறுங்கள். 

மரம் வளர்ப்போம்..! மழை பெறுவோம்..!


சுசி திருஞானம் 
99400 90596

Sunday, June 17, 2018

MEDICAL CAREER IN INDIA






How to get MBBS admission in Tamil Nadu?

The admission to Tamil Nadu MBBS 2018 will be conducted by the Directorate of Medical Education (DME) for the 85% state quota seats. 

Candidates will be granted admission to Tamil Nadu MBBS 2018 on the basis of the NEET UG score and the preference of the candidates’ while online filling-up of choices.

Only the candidates who fill up the application form of Tamil Nadu MBBS 2018 will be eligible for Tamil Nadu MBBS admission 2018. 

The last date of issue of application form is June 18, 2018 and candidates can submit the application form until June 19, 2018. The candidates filling up the online application will have to attend the document verification session in order to be included in the merit list of Tamil Nadu MBBS 2018 admission. 

Admission to Tamil Nadu MBBS 2018 will be conducted for 3,456 medical seats and 1,201 dental seats in the government as well as private colleges. The candidates included in the state merit list will have to opt for online choice filling for admission to Tamil Nadu MBBS 2018. 

The counselling process of Tamil Nadu MBBS admission 2018 will from July 1, 2018 onwards.



What is the total number of seats available through NEET 2018?

Total number of MBBS seats is 52715. 
Total number of private college seats is 26835. 
Total number of government seats is 25880.



What is the total number of medical colleges in India?

There are a total of 412 medical colleges in India. Out of 412 colleges, 
190 are government colleges. 
222 are private medical colleges.



Sunday, April 2, 2017

மகத்தான சாதனைகளின் தொடக்கம் கனவுகள்தான்!


சிறு விதையில் உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு பெரும் மரம்.

முட்டையில் காத்திருக்கிறது
வானை அளக்கும் ஒரு பறவை.

மகத்தான சாதனைகளின் தொடக்கம்
கனவுகள்தான்.

வெற்றி தேவதை சிறகடித்து பறக்கத்தொடங்குவது,
ஆன்மாவை உலுக்கும் பிரமாண்டமான கனவுகளில்தான்.

நடைமுறை வெற்றியை சுவைக்க விரும்புகிறவர்கள்
கனவு விதைகளை முதலில் சுமக்க வேண்டும்.

- ஜேம்ஸ் ஆலென் 

Saturday, April 1, 2017

பாதிக் கிணறு தாண்டுவதுபோல் ஆபத்தானது - சீமைக்கருவேலம் மரங்களை அகற்றும் இயக்கம்!


எரி, குளம், கால்வாய், சாலையோரம், அரசு புறம்போக்கு இடங்கள், தனியார் தோட்டங்கள்... என தமிழகத்தில் பார்த்த இடமெல்லாம் செழித்து வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வு அண்மையில் உருவாகியிருக்கிறது. 

நிலத்தின் ஈரப் பதத்தை உறிஞ்சி, தோட்டங்களை பயனற்ற பொட்டல்மேடாக மாற்றும் இந்த நச்சு மரங்களை அகற்றும் பணியில் பல்லாயிரம் மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்கியிருக்கின்றனர். 

இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். 

அதேவேளையில் மிகவும் ஏழ்மையில் வாழும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே எரிபொருளாக விளங்கி வரும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்று மரங்களை நட்டு வளர்ப்பது அவசர அவசியம். 

மாற்று மரங்களை மிகப் பெரிய அளவில் நட்டு வளர்க்காவிட்டால், அடித்தட்டு மக்களுக்குப் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமல்ல பெரு மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை ஓரளவு தடுத்துவந்த சீமைக்கருவேலம் மரங்கள் ஒட்டுமொத்தமாக அகற்றப்படுவதால், அடுத்துவரும் மழைக்காலங்களில், தமிழகம் இதுவரை சந்தித்திராத மண்வளப் பேரிழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. 

சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இயக்கம், பாதிக் கிணறு தாண்டுவதுபோல் ஆபத்தானது 


சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்றாக கோடிக்கணக்கில் வளர்க்கத் தகுந்த, பன்முகப் பயன்பாடுகொண்ட ஓர் அதிசய மரம் - சூபாபுல் அல்லது கூபாபுல் என்று அழைக்கப்படும் சவுண்டல் மரம். 

தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட சவுண்டல் மரம், தொன்மைமிக்க மாயன் இனத்தவர் போற்றி வளர்த்த அற்புத மரம். தற்போது வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் பல்கிப் பரந்துள்ளது சவுண்டல் மரம். 

சவுண்டல் மரத்தை வளர்ப்பது எளிது. ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மரம் என்ற விகிதத்தில், ஒரு ஹெக்டேர் பரப்பில் பத்தாயிரம் சவுண்டல் மரங்களை சமூகக் காடுகளாக வளர்க்க முடியும். 

இளைப்பாற நிழல்தரும் மரம், மிகச்சிறந்த பசுந்தாழ் உரம், அற்புதமான தீவனம், எரிதிறன் மிக்க விறகு, உறுதியான பலகை மரம், காகிதக் கூழ் மரம், மண் அரிப்பைத் தடுக்கும் மரம், மழைதரும் மரம் - என சவுண்டல் மரத்தின் பயன்கள் ஏராளம், ஏராளம். 


மண்வளத்துக்கு மிகவும் அவசியமான நைட்ரஜன் சத்தினை மேல்மண் பகுதிக்கு வாரி வழங்குவதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. சவுண்டல் மரத்தின் இலைதழைகள் மிகச் சிறந்த பசுந்தாழ் உரமாகப் பயன்படுகின்றன. ஒரு ஹெக்டர் பரப்பில் ஓராண்டு காலம் சவுண்டல் மரம் வளர்த்து, அதன் இலை தழைகளை இயற்கை உரமாகப் பயன்படுத்தினால், 500  கிலோ நைட்ரஜன் உரமும், 200 கிலோ பாஸ்பேட் உரமும்,  500 கிலோ பொட்டாஷ் உரமும் போட்டதற்குச் சமம் என்கிறது இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. சவுண்டல் மரத்தின் இலை தழைகளை இயற்கை உரமாகப் பயன்படுத்தினால், பயிர் விளைச்சல் 3.8 மடங்கு அதிகரிப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. 


சவுண்டல் மரம் கால்நடைகளுக்கு அற்புதமான தீவனம். 25 சதவீதத்துக்கும் அதிகமான புரதச் சத்தும், பிற சத்துக்களும் நிறைந்த சவுண்டல் இலைகளை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. ஒரு ஹெக்டர் பரப்பில் சவுண்டல் மரம் வளர்த்தால் ஓர் ஆண்டில் 20 மெட்ரிக் டன்  அளவுக்கு தீவனம் கிடைக்கிறது. சவுண்டல் இலைகளை தீவனமாக உட்கொண்ட மாடுகளின் பால் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது. 



சவுண்டல் மரம் மிகச் சிறந்த எரிதிறன் கொண்டது. விலை உயர்ந்த எரிபொருளான இயற்கை ஏரிவாயுவின் எரிதிறனில் 35 சதவீதம் வரை எரிதிறன் கொண்டது சவுண்டல் மரம். இயற்கை எரிவாயுவின் தயாரிப்பு  செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவான செலவில் சவுண்டல் மரங்களை வளர்க்கமுடியும். எரிபொருள் தேவையை சமாளிக்க, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டங்களுக்குப் பதிலாக சவுண்டல் மரம் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதே புத்திசாலித்தனமானது.


பலகை தயாரிப்புக்கு உகந்த 'ஏழைகளின் தேக்கு' சவுண்டல் மரம். தேக்கு மரத்துக்கு சற்றே குறைவான மதிப்புடையது என்றபோதும் 5 ஆண்டுகளில் 2 அடி விட்டமும் 20 மீட்டர் வரை உயரமும் கொண்டு அதிவேகமாக வளரக்கூடியது சவுண்டல் மரம். மர உபகரணங்கள் மற்றும்  அறைகலன்கள் தயாரிக்க உகந்த பலகைகளை மிகக் குறைந்த ஆண்டுகளில் வழங்கும் அதிசய மரம் சவுண்டல். 


50 சதவீதம் வரை கூழ்திறன் கொண்ட சவுண்டல் மரம், காகிதக் கூழ் உற்பத்திக்கும் மிகச் சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது. காகித ஆலைகள், டன்னுக்கு ஆயிரம் ருபாய் விலைகொடுத்து சவுண்டல் மரங்களை வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் சவுண்டல் மரங்களை வளர்த்தால் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு உருவாகிவிடும். 


பல்கிப் பெருகி வளர்வதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. இந்தத் தன்மை காரணமாகவே, மண் அரிப்பைத் தடுப்பதில் சவுண்டல் மரம் மிகச் சிறந்த பாத்திரமாற்றுகிறது. வழிந்தோடும் மழைநீரில் 30 சதவீதம் நீரை மண்ணுக்குள் தேக்கிவைத்து, மெல்ல வெளியிடும் ஆற்றல் சவுண்டல் மரங்களுக்கு உண்டு. 


இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, மேகங்களை ஈர்த்து குளிர்வித்து மழையாகப் பொழியவைக்கும் ஆற்றல் சவுண்டல் மரக் காடுகளுக்கு உண்டு. ஒரு ஹெக்டேர் பரப்பில் 10,000 மரங்கள் என்ற அளவுக்கு சவுண்டல் மரங்கள் பல்கிப் பெருகி நிற்கும் நிலையில், அவை வெளியிடும் ஈரப்பதம் மிக்க காற்று மேகத்தைக் குளிர்வித்து மழையை வரவைக்கிறது. 

இப்படி ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் சவுண்டல் மரக் கன்றுகளை மானாவாரி பகுதிகளில், சாலை ஓரங்களில், நீர்நிலைகளின் ஓரங்களில் கோடிக்கணக்கில் நடலாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றிய அனைத்து இடங்களிலும் சவுண்டல் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கலாம். 



அரசின் வேளாண்மைத் துறை, வேளாண் கல்லூரிகள், வனத்துறை அலுவலகங்கள் அனைத்தும், சவுண்டல் மரக் கன்றுகளையும் விதைகளையும் கோடிக் கணக்கில் வாரி வழங்கலாம்.   

ஒரு முக்கியமான எச்சரிக்கை : விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களில் சவுண்டல் நடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது களைப் பயிராக வேகமாக வளர்ந்து விளைச்சலை பாதிக்கும். 

பயன்மிக்க அதிசய மரமான சவுண்டல் மரங்களை மானாவாரி பகுதிகளில் கோடிக் கணக்கில் நட்டு வளர்த்தால், தமிழகம் மழைவளம் பெற்று, பசுமை பூமியாக மீண்டும் மலரும். வறட்சிக் காலங்களில் எல்லாம் கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் தண்ணீர் கேட்டு கையேந்தி நிற்கும் அவல நிலை மாறும். நமக்கு வேண்டிய மழை நீரை, நமது சவுண்டல் மர சமூகக் காடுகள் தாமே வாரி வழங்கும். 

இது இந்தோனேசிய நாட்டில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அங்கு சவுண்டல் மர சமூகக் காடுகளை உருவாக்கிய மாபெரும் இயக்கம் காரணமாக, காய்ந்து மணல்மேடாகக் கிடந்த நதிகள் உயிர்பெற்று, வற்றாத ஜீவா நதிகளாக மாறிய அதிசயம் நடந்தது. 


சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுள்ள இளைய நண்பர்களே, பாதிக் கிணறு தாண்டுவதில் உள்ள ஆபத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் காட்டும் அதே ஆர்வத்தை, அதிசய மரமாம் சவுண்டல் மரங்களை நட்டு வளர்ப்பதில் காட்டுங்கள்.  

சுசி திருஞானம் 
ஆசிரியர் - புன்னகை கல்வி மாத இதழ்கள் 
99400 90596






விதை குண்டுகளை வீசும் விமானங்கள் !


வழிகாட்டுகிறது தாய்லாந்து!! 

மரம் பூமித்தாயின் வரம்.
 
மரங்களே மேகத்தைக் குளிர்வித்து மழைபொழியவைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

மரங்களே நாம் சுவாசிக்கும் சுத்தமான ஆக்சிஜனை உறுதிசெய்யும் முக்கிய காரணிகள்.

மரங்களால் மட்டுமே கோடிக்கணக்கான பறவைகள், பூச்சிகள், விலங்குகள் உயிர்பிழைத்திருக்கின்றன.

ஆனால், தனது பேராசைக்காக தினம்தோறும் 25 லட்சம் மரங்களை அழிக்கிறது மனித இனம். ஆண்டுதோறும் 90 கோடி மரங்களை வெட்டி வீழ்த்துகிறது மனித இனம்.

அழிக்கப்படுவது மரங்கள் மட்டுமல்ல - ஒரு மரம் வெட்டப்படும்போது, அதனைச் சுற்றி வாழும் எண்ணற்ற உயிரினங்கள் அழிகின்றன அல்லது பாதிக்கப்படுகின்றன. ஒரு மகத்தான பல்லுயிர் சூழலை அழித்து சூறையாடிவருகிறது மனித இனம்.

நமது பூமிக் கோளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், 1 கொடியே 60 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 60 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே காடுகள் உள்ளன.

மழைதரும் மரங்களை, மீண்டும் கோடிக்கணக்கில் வளர்க்கவேண்டும், உலகின் பல்லுயிர் சூழலைப் போற்றி காத்திட வேண்டும் என்ற ஆர்வம் இப்போது பல நாடுகளில் தளிர்விடத் தொடங்கியிருக்கிறது.

இதில் தாய்லாந்து நாடு ஒரு முன்மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிஸானுலோ மாநில உயிரியல் பூங்காவில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில், விமானம் மூலமாக விதை குண்டுகள் வீசப்பட்டு மாபெரும் மர வளர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ராயல் தாய்லாந்து விமானப்படை விமானம் மூலமாக வீசப்பட்ட இந்த விதைகுண்டுகள், மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை.

மழைதரும் மர விதைகளை கம்போஸ்ட் உருண்டைகளில் புதைத்து இந்த விதை குண்டுகள் உருவாக்கப் படுகின்றன.

தரையில் விழுந்த இந்த விதை குண்டுகள் முளைவிட்டு, மழைநீர் உதவியுடன் தளிர்விட்டு வளர்ந்து, பயன்தரும் மரங்களாக பல்கிப் பெருகி வளர்கின்றன.

இந்த அருமையான முன்மாதிரியை நாமும் பின்பற்றலாமே...

இங்கும் உரிய ஏற்பாடுகள் செய்து, விதைகுண்டுகள் வீசி, மொட்டையாக நிற்கும் மலைகளை, பொட்டல் காடுகளை, பசும் சோலைகளாக மாற்றலாம்.

ஆர்வமுள்ள ஊடகங்கள் இதுகுறித்துப் பேசலாம்.

அக்கறையுள்ள மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் இதனை செயல்படுத்த முன்வரலாம்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

சுசி திருஞானம்
ஆசிரியர் KIDS Punnagai & GENIUS Punnagai கல்வி மாத இதழ்கள் 
99400 90596












மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


இனிய இளவல்களே,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நீங்களாகவே மெரினா கடற்கரையில் திரண்டுவந்து நின்ற காட்சியைப் பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன். 

தமிழ்மண்ணின் ஆணிவேரான கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே உங்கள் மெரினா கடற்கரை நிகழ்வை நான் பார்க்கிறேன்.

விவசாயப் பின்னணியில் பிறந்துவளர்ந்த வேளாண்மைப் பட்டதாரி என்ற வகையிலும், விவசாயம் தழைக்கவேண்டும் என்ற வேட்கைகொண்ட ஊடகவியலாளன் என்ற முறையிலும், உங்கள் உணர்வை வியந்து போற்றுகிறேன். இதே உணர்வு சரியான திசையில் செலுத்தப்பட்டால் மகத்தான மாற்றங்கள் சாத்தியமே என்று எனக்குள் நம்பிக்கை பெறுகிறேன்.

இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை, இன்று தமிழக விவசாயம், அழிவின் விளிம்பில் நிற்கிறது. ஆங்காங்கே நிகழும் விவசாயிகளின் தற்கொலைகள், நாம் எதிர்நோக்கும் பேரழிவின் முன்னறிவிப்புகள் மட்டுமே. 

ஒரு பாலைவனத்தை எப்படி பசும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் இஸ்ரேல். ஒரு பசும் சோலைவனத்தை எப்படி பாலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் தமிழகம்.

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாயிகள், இன்று கருகும் பயிர்களைப் பார்த்து மனமுடைந்து தற்கொலைசெய்து கொள்கிறார்கள். இந்த பரிதாப நிலைமைக்கு, நம்மை ஆண்டவர்கள் மட்டும் காரணமல்ல, நமது அறியாமையும் காரணம்.

இந்த நிலைமை மாறவேண்டுமானால் - தமிழக விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டுமானால் - அது ஜல்லிக்கட்டு மூலமாக நடந்துவிடாது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். தமிழக விவசாயம் குறித்த விரிவான புரிதல் நமக்கு வேண்டும்.

கீழ்க்கண்ட 4 வகையான பணிகளை சாதித்தால், தமிழக விவசாயம், உலக அரங்கில் முன்னுதாரணமாக பேசப்படும் காலம் உருவாகும்.

1. மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

மேகத்தை குளிர்வித்து மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. 

இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட அவர்கள் செய்த முதல் வேலை, மரங்கள் நடும் மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியதுதான். 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட அந்த நாட்டில், 25 கோடி மரங்கள் புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால், அந்தப் பாலைமண் பூமியில் இப்போது ஆப்பிளும், தக்காளியும் நம்மைவிடப் பல மடங்கு விளைகிறது.

ஆனால் நாம், நம்மிடம் இருந்த பசுமை மாறாக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளாகவும், சாமியார் மடங்களாகவும், தார்ச் சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

நமது இளைஞர்கள் களம் இறங்கினால், நமது 17,000 கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம் மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து 100 கோடி மரங்கள் வளர்ப்பது 100 சதம் சாத்தியமே.

வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்தி, வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தனம், செஞ்சந்தனம், சவுண்டல் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.

இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால், ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் கையேந்தும் நிலைமை ஒருபோதும் வராது. விவசாயிகள் வானத்தை வெறித்துப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமை முற்றிலும் மாறிவிடும். மாதம் மும்மாரி பொழிவது இயற்கை நியதியாக மாறிவிடும்.

2. நீராதாரங்கள் பாதுகாப்பு 

தொழில்நுட்ப அறிவு பற்றி மேலைநாடுகளில் பேசப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிற நதியின் குறுக்கே பிரமாண்ட அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவை செயலில் காட்டி சாதித்தவன் தமிழன். 

ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உருவாக்குவதையும், அவற்றைப் பேணிக்காப்பதையும் அரசின் தலைமைப் பணியாகக் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள். 

நீராதாரங்களை கூறுபோட்டுவிற்கும் கொலைபாதகர்களால்தான் நமது விவசாயம் சின்னாபின்னமானது. 

இருக்கிற ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் கால்வாய்களை போற்றிக் காப்பதையும், புதியனவற்றை சாத்தியமான அளவில் உருவாக்குவதையும் இளைய தலைமுறை தனது கடமையாக தோளில் ஏற்கட்டும்.

3. பல்லுயிர் சூழல் விவசாயத்தை மீண்டும் மலரச் செய்வோம். 

ஜல்லிக்கட்டு நமது முன்னோரின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை. அவர்கள் வாழ்வில் காளைகள் மட்டும் அல்ல - பசுக்கள், எருமைகள், ஆடுகள், முயல்கள், பன்றிகள், கோழிகள், கிளிகள், குருவிகள், புறாக்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், தட்டான்கள், மண்புழுக்கள் என பல்லுயிர் சூழ்ந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர். 

இன்றைய விவசாயம் மீண்டும் பல்லுயிர் சூழ்ந்த விவசாயமாக மாறவேண்டும். அப்போதுதான் மலடாகிப்போன மண், மீண்டும் உயிர்பெற்று அதிக விளைச்சலை அள்ளித்தரும். நமது விவசாயிகளை பல்லுயிர் சூழல் விவசாயத்திலும், புதிய விவசாய தொழில் நுட்பங்களிலும் பயிற்றுவித்து அவர்களுக்குத் துணை நிற்பது அவசர அவசியம்.

பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தின் ஓர் அடையாளமாக நமது முன்னோரின் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு இருந்தது என்று பெருமை கொள்வோம். அதற்காக இன்றைய கணினி யுக இளைஞர்கள் ஏறு தழுவுதல் வீர விளையாட்டில் இறங்கி ஒருகை பார்க்கவேண்டும் என்று சிந்திப்பது அறியாமை.

கணினி யுக இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள், பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தில் ஈடுபடலாம். நாட்டுமாடு, நாட்டு ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பதை பெரும் தொழிலாக செய்யலாம். ஒற்றை நெல் சாகுபடி, துல்லியப் பண்ணையம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும். அது மட்டுமல்ல, வேறு எங்கும் கிடைக்காத மன நிறைவும் இதில் பெறமுடியும்.

4. ஆலைத் தொழில்போல், திட்டமிடப்பட்ட விவசாயம் 

முதல் மூன்று பணிகளால் தண்ணீரும், மண் வளமும் உறுதிசெய்யப்பட்டு உயர் விளைச்சல் சாத்தியமாகும். ஆனால், அதிகமாக விளைந்த தக்காளியும், வெங்காயமும், வாழைக்காயும் சாலைகளில் கொட்டப்படுவது போன்ற நிலைமைகள் இனி வரவே கூடாது. 

அதற்கு ஒரே வழி, மாநில அளவிலும், வட்டார அளவிலும் விவசாய உற்பத்தி திட்டமிடப்பட்ட வேண்டும். ஆலைத் தொழில்போல், விவசாயத்தையும் PROFESSIONAL VENTURE ஆக மதித்துப் போற்றவேண்டும். அதற்குரிய பயிற்சிகள் மானிய உதவிகள், மாதிரிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.

மற்ற எல்லாவித ஆலை உற்பத்தி பொருட்களுக்கும், லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யப்படுவதுபோல், விவசாய விளைச்சலுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கான நிர்பந்தத்தை அரசுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

தமிழக விவசாயத்தில் உண்மையான புரட்சியை சாத்தியமாக்கும் இந்த 4 மகத்தான பணிகளையும் எந்த அரசாங்கமும் தானே செய்யாது. அதற்குரிய அக்கறையும் மனத்துணிவும் இளைய சக்தியிடம் பீறிட்டுக் கிளம்பினால் மட்டுமே இவை சாத்தியம்.

அன்பு இளவல்களே, 

ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற அடையாள போராட்டத்தில் நீங்கள் முடங்கிவிடவேண்டாம். பண்டிகைகால நிகழ்வுகள்போல் உங்கள் உணர்வுகள் முனைமழுங்கிப் போகவேண்டாம்.

நமது கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மேலும் வளர்த்தெடுங்கள். 
மேலே சொன்ன நான்கு விதமான பணிகளில் எது முதலில் சாத்தியமோ முதலில் அதைத் தொடங்குங்கள்.

ஆக்கபூர்வ ஊடகங்களும், நேர்மையாகச் சிந்திக்கும் வேளாண்மைத் துறை சார்ந்தவர்களும் உங்களுக்குத் துணை நிற்பார்கள். எங்களைப் போன்றவர்கள் பாலமாகச் செயல்படத் தயார். ஊர்கூடித் தேர் இழுக்கலாம்.
பசுமையான தமிழகம் மலரட்டும்! விவசாயிகள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!

நட்புடன் 
சுசி திருஞானம்
ஆசிரியர், KIDS Punnagai & GENIUS Punnagai - கல்வி மாத இதழ்கள்
99400 90596

Written on Jan 8, 2017