எரி, குளம், கால்வாய், சாலையோரம், அரசு புறம்போக்கு இடங்கள், தனியார் தோட்டங்கள்... என தமிழகத்தில் பார்த்த இடமெல்லாம் செழித்து வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வு அண்மையில் உருவாகியிருக்கிறது.
நிலத்தின் ஈரப் பதத்தை உறிஞ்சி, தோட்டங்களை பயனற்ற பொட்டல்மேடாக மாற்றும் இந்த நச்சு மரங்களை அகற்றும் பணியில் பல்லாயிரம் மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்கியிருக்கின்றனர்.
இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.
அதேவேளையில் மிகவும் ஏழ்மையில் வாழும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே எரிபொருளாக விளங்கி வரும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்று மரங்களை நட்டு வளர்ப்பது அவசர அவசியம்.
மாற்று மரங்களை மிகப் பெரிய அளவில் நட்டு வளர்க்காவிட்டால், அடித்தட்டு மக்களுக்குப் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமல்ல பெரு மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை ஓரளவு தடுத்துவந்த சீமைக்கருவேலம் மரங்கள் ஒட்டுமொத்தமாக அகற்றப்படுவதால், அடுத்துவரும் மழைக்காலங்களில், தமிழகம் இதுவரை சந்தித்திராத மண்வளப் பேரிழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இயக்கம், பாதிக் கிணறு தாண்டுவதுபோல் ஆபத்தானது
சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்றாக கோடிக்கணக்கில் வளர்க்கத் தகுந்த, பன்முகப் பயன்பாடுகொண்ட ஓர் அதிசய மரம் - சூபாபுல் அல்லது கூபாபுல் என்று அழைக்கப்படும் சவுண்டல் மரம்.
தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட சவுண்டல் மரம், தொன்மைமிக்க மாயன் இனத்தவர் போற்றி வளர்த்த அற்புத மரம். தற்போது வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் பல்கிப் பரந்துள்ளது சவுண்டல் மரம்.
சவுண்டல் மரத்தை வளர்ப்பது எளிது. ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மரம் என்ற விகிதத்தில், ஒரு ஹெக்டேர் பரப்பில் பத்தாயிரம் சவுண்டல் மரங்களை சமூகக் காடுகளாக வளர்க்க முடியும்.
இளைப்பாற நிழல்தரும் மரம், மிகச்சிறந்த பசுந்தாழ் உரம், அற்புதமான தீவனம், எரிதிறன் மிக்க விறகு, உறுதியான பலகை மரம், காகிதக் கூழ் மரம், மண் அரிப்பைத் தடுக்கும் மரம், மழைதரும் மரம் - என சவுண்டல் மரத்தின் பயன்கள் ஏராளம், ஏராளம்.
மண்வளத்துக்கு மிகவும் அவசியமான நைட்ரஜன் சத்தினை மேல்மண் பகுதிக்கு வாரி வழங்குவதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. சவுண்டல் மரத்தின் இலைதழைகள் மிகச் சிறந்த பசுந்தாழ் உரமாகப் பயன்படுகின்றன. ஒரு ஹெக்டர் பரப்பில் ஓராண்டு காலம் சவுண்டல் மரம் வளர்த்து, அதன் இலை தழைகளை இயற்கை உரமாகப் பயன்படுத்தினால், 500 கிலோ நைட்ரஜன் உரமும், 200 கிலோ பாஸ்பேட் உரமும், 500 கிலோ பொட்டாஷ் உரமும் போட்டதற்குச் சமம் என்கிறது இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. சவுண்டல் மரத்தின் இலை தழைகளை இயற்கை உரமாகப் பயன்படுத்தினால், பயிர் விளைச்சல் 3.8 மடங்கு அதிகரிப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
சவுண்டல் மரம் கால்நடைகளுக்கு அற்புதமான தீவனம். 25 சதவீதத்துக்கும் அதிகமான புரதச் சத்தும், பிற சத்துக்களும் நிறைந்த சவுண்டல் இலைகளை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. ஒரு ஹெக்டர் பரப்பில் சவுண்டல் மரம் வளர்த்தால் ஓர் ஆண்டில் 20 மெட்ரிக் டன் அளவுக்கு தீவனம் கிடைக்கிறது. சவுண்டல் இலைகளை தீவனமாக உட்கொண்ட மாடுகளின் பால் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது.
சவுண்டல் மரம் மிகச் சிறந்த எரிதிறன் கொண்டது. விலை உயர்ந்த எரிபொருளான இயற்கை ஏரிவாயுவின் எரிதிறனில் 35 சதவீதம் வரை எரிதிறன் கொண்டது சவுண்டல் மரம். இயற்கை எரிவாயுவின் தயாரிப்பு செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவான செலவில் சவுண்டல் மரங்களை வளர்க்கமுடியும். எரிபொருள் தேவையை சமாளிக்க, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டங்களுக்குப் பதிலாக சவுண்டல் மரம் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதே புத்திசாலித்தனமானது.
பலகை தயாரிப்புக்கு உகந்த 'ஏழைகளின் தேக்கு' சவுண்டல் மரம். தேக்கு மரத்துக்கு சற்றே குறைவான மதிப்புடையது என்றபோதும் 5 ஆண்டுகளில் 2 அடி விட்டமும் 20 மீட்டர் வரை உயரமும் கொண்டு அதிவேகமாக வளரக்கூடியது சவுண்டல் மரம். மர உபகரணங்கள் மற்றும் அறைகலன்கள் தயாரிக்க உகந்த பலகைகளை மிகக் குறைந்த ஆண்டுகளில் வழங்கும் அதிசய மரம் சவுண்டல்.
50 சதவீதம் வரை கூழ்திறன் கொண்ட சவுண்டல் மரம், காகிதக் கூழ் உற்பத்திக்கும் மிகச் சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது. காகித ஆலைகள், டன்னுக்கு ஆயிரம் ருபாய் விலைகொடுத்து சவுண்டல் மரங்களை வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் சவுண்டல் மரங்களை வளர்த்தால் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு உருவாகிவிடும்.
பல்கிப் பெருகி வளர்வதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. இந்தத் தன்மை காரணமாகவே, மண் அரிப்பைத் தடுப்பதில் சவுண்டல் மரம் மிகச் சிறந்த பாத்திரமாற்றுகிறது. வழிந்தோடும் மழைநீரில் 30 சதவீதம் நீரை மண்ணுக்குள் தேக்கிவைத்து, மெல்ல வெளியிடும் ஆற்றல் சவுண்டல் மரங்களுக்கு உண்டு.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, மேகங்களை ஈர்த்து குளிர்வித்து மழையாகப் பொழியவைக்கும் ஆற்றல் சவுண்டல் மரக் காடுகளுக்கு உண்டு. ஒரு ஹெக்டேர் பரப்பில் 10,000 மரங்கள் என்ற அளவுக்கு சவுண்டல் மரங்கள் பல்கிப் பெருகி நிற்கும் நிலையில், அவை வெளியிடும் ஈரப்பதம் மிக்க காற்று மேகத்தைக் குளிர்வித்து மழையை வரவைக்கிறது.
இப்படி ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் சவுண்டல் மரக் கன்றுகளை மானாவாரி பகுதிகளில், சாலை ஓரங்களில், நீர்நிலைகளின் ஓரங்களில் கோடிக்கணக்கில் நடலாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றிய அனைத்து இடங்களிலும் சவுண்டல் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.
அரசின் வேளாண்மைத் துறை, வேளாண் கல்லூரிகள், வனத்துறை அலுவலகங்கள் அனைத்தும், சவுண்டல் மரக் கன்றுகளையும் விதைகளையும் கோடிக் கணக்கில் வாரி வழங்கலாம்.
ஒரு முக்கியமான எச்சரிக்கை : விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களில் சவுண்டல் நடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது களைப் பயிராக வேகமாக வளர்ந்து விளைச்சலை பாதிக்கும்.
பயன்மிக்க அதிசய மரமான சவுண்டல் மரங்களை மானாவாரி பகுதிகளில் கோடிக் கணக்கில் நட்டு வளர்த்தால், தமிழகம் மழைவளம் பெற்று, பசுமை பூமியாக மீண்டும் மலரும். வறட்சிக் காலங்களில் எல்லாம் கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் தண்ணீர் கேட்டு கையேந்தி நிற்கும் அவல நிலை மாறும். நமக்கு வேண்டிய மழை நீரை, நமது சவுண்டல் மர சமூகக் காடுகள் தாமே வாரி வழங்கும்.
இது இந்தோனேசிய நாட்டில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அங்கு சவுண்டல் மர சமூகக் காடுகளை உருவாக்கிய மாபெரும் இயக்கம் காரணமாக, காய்ந்து மணல்மேடாகக் கிடந்த நதிகள் உயிர்பெற்று, வற்றாத ஜீவா நதிகளாக மாறிய அதிசயம் நடந்தது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுள்ள இளைய நண்பர்களே, பாதிக் கிணறு தாண்டுவதில் உள்ள ஆபத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் காட்டும் அதே ஆர்வத்தை, அதிசய மரமாம் சவுண்டல் மரங்களை நட்டு வளர்ப்பதில் காட்டுங்கள்.
சுசி திருஞானம்
ஆசிரியர் - புன்னகை கல்வி மாத இதழ்கள்